பிரான்ஸில் யூதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் பாதுகாப்பு!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே திடீரென வெடித்த சண்டை!! நூற்றுக்கணக்கானோர் பலி
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸில் யூத இன மக்கள் குடியிருக்கின்ற பகுதிகளில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா சகல பொலீஸ் தலைமையகங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே எதிர்பாராத சமயத்தில் மூண்டுள்ள கடும் சண்டையின் எதிரொலியாக யூத குடிமக்களது பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. அதனையடுத்தே அரசு யூதர்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதிபர் மக்ரோன் இன்று காலைப் பொழுதில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இஸ்ரேலுக்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ள அவர், பிரான்ஸில் யூத இன மக்கள் கூடுகின்ற பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்களது பாதுகாப்பை அதிகரிக்குமாறு உள்துறை அமைச்சரைப் பணித்துள்ளார் – என்று பாரிஸ் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
பலஸ்தீன விடுதலை அமைப்பின் இராணுவப் பிரிவாகிய ஹமாஸ் இயக்கம் இன்று சனிக்கிழமை காலை தீடீரென நடத்திய ரொக்கெட் தாக்குதல்களினால் இஸ்ரேலியப் பகுதிகளில் குறைந்தது எழுபது பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இருநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் இயக்கத்தினரால் காஸா பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் ரொக்கெட்டுகள் வரை ஏவப்பட்டுள்ளன. அதேசமயம் புல்டோசர்கள் சகிதம் எல்லைகளைத் தகர்த்தவாறு ஹமாஸ் வீரர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் தொடுத்துள்ளனர். எதிர்பாராத நேரத்தில் நடத்தப்பட்டிருக்கின்ற இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு “அல் அக்ஸா வெள்ளம்” (“Al-Aqsa Flood”) பெயர் சூட்டப்பட்டிருப்பதாக ஹமாஸ் இயக்கப் பேச்சாளர் ஒருவர் அறிவித்திருக்கிறார். தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. பலஸ்தீனியத் தரப்பில் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் எல்லையை உடைத்து அதிரடியாகப் புகுந்த ஹமாஸ் வீரர்கள் காஸாவை அண்டியுள்ள நகரங்களில் இஸ்ரேலியப் பொது மக்களையும் படை வீரர்களையும் பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடியான ஊடுருவல் இஸ்ரேலிய உளவுத்துறையின் வரலாற்றில் மிக மோசமான ஒரு தோல்வியாகக் கணிக்கப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை இஸ்ரேல் மீதான போர் என்று பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு பிரகடனம் செய்துள்ளார். இஸ்ரேல் மீதான இன்றைய தாக்குதலைப் பல நாடுகளும் கண்டித்திருக்கின்றன. மோதல்கள் மேலும் விரிவடைவதை அனுமதிக்க வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபை அவசர வேண்டுகோள் விடுத்திருக்கிறது.