கோர்சிகா தீவுக்கு தன்னாட்சி அதிகாரம் மக்ரோன் அறிவிப்பு.
பிரெஞ்சுக் குடியரசுக்குள்அடங்கிய சுயாட்சி முறை
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாகிய கோர்சிகாத் தீவுக்கு(Corsica) பிரெஞ்சுக் குடியரசுக்குட்பட்ட தன்னாட்சி (autonomy) அதிகாரம் வழங்கும் விதமாக நாட்டின் அரசமைப்பில் மாற்றம் செய்யப்படும் என்று அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.
மத்தியதரைக் கடலில், இத்தாலி அருகே அமைந்துள்ள கோர்சிகா தீவில் விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள பிராந்தியச் சட்ட சபையில் உரையாற்றிய வேளை – வரலாற்று முக்கியத்துவம் மிக்க – இந்த அறிவிப்பை விடுத்தார்.
பிரெஞ்சு மற்றும் கோசிகா தீவு மக்களது பிரதான மொழியாகிய கோசிகன் தாய் மொழி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய பொதுத் தேசிய கல்விச் சேவை ஒன்றும் அங்கு தொடக்கப்படும் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார். கோர்சிகன் தேசியவாதிகள் அதனை வரவேற்றுள்ளனர். தன்னாட்சி அதிகாரம் தொடர்பான ஒரு வரைவைத் தயாரிப்பதற்காக கோர்சிகா சட்ட சபையில் இடம்பெறுகின்ற அரசியல் கட்சிகளுக்கு ஆறுமாதகால அவகாசத்தை மக்ரோன் வழங்கியுள்ளார். அது பின்னர் பாரிஸில் உள்ள நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பிரான்ஸின் குடியரசுச் சட்டங்களின் படி தன்னாட்சி வழங்கும் அரசமைப்பு மாற்றத்தைக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் செய்துவிட முடியாது. அரசமைப்புக் காங்கிரஸின் ஐந்தில் மூன்று வீத வாக்குகள் அதற்கு அவசியம் ஆகும். மக்ரோனின் அரசு வலதுசாரிகளது பெரும்பான்மை பெற்ற நாடாளுமன்றத்தின் ஊடாக இந்த அரசமைப்புத் திருத்தத்தை முன்னெடுப்பதென்பது பெரும் சவாலான விடயம் ஆகும். கோர்சிகாவுக்கு சுயாட்சி வழங்குவதை வலதுசாரிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
கோர்சிகாவின் தேசியவாதிகள் பல தசாப்தங்கள் நீடித்த பிரிவினைவாதப் போராட்டத்துக்குப் பின்னர் ஜனநாயக அரசியல்வழிமுறைக்குத் திரும்பியிருந்தனர். ஆயினும் அதனால் எந்த வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்ற விரக்தி இப்போது அங்கு அதிகரித்து வருவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.