ஏழு வருட பயணம்!! ஆபத்தான பென்னு சிறுகோள் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்தது நாசா!
பென்னு என்ற சிறுகோளின் மாதிரியை சேகரித்துள்ள நாசாவின் ‘ஒசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலத்தின் காப்ஸ்யூல் சுமார் ஏழு வருட பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது.
விண்வெளியில் சுற்றி திரியும் பென்னு எனும் சிறு கோளானது வரும் காலத்தில் பூமியை தாக்கக்கூடும் என முன்னதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்து இருந்தனர். இந்நிலையில், பூமியை தாக்கும் இந்த சிறுகோளின் மாதிரியை சேகரிக்க அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் ‘ஒசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலத்தை பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் இருக்கும் பென்னு சிறுகோளை நோக்கி செலுத்தப்பட்டது.
தற்போது, பென்னு சிறுகோளில் இருந்து சேகரித்த ஒசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலத்தின் காப்ஸ்யூல் (கொள்கலன்) மாதிரிகளுடன் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள உட்டா பாலைவனத்தில் நேற்று பாதுகாப்பாக தரையிறங்கியது.
சூரியனைச் சுற்றி வரும் பென்னு சிறுகோளை, 1991 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கண்டறிய பட்டது. பென்னு (bennu) சிறுகோள் பூமியைத் தாக்கினால், இதுவரை சோதிக்கப்பட்ட மிகப்பெரிய ஹைட்ரஜன் வெடிகுண்டை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இது ஒரு மிகவும் ஆபத்தான சிறுகோள் என்றும், இது 22-ம் நூற்றாண்டில் பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் ஆனது, பூமி தோன்றுவதற்கு முன்பே உருவானது என்று கருதப்படுகிறது. பென்னு சிறுகோளின் சராசரி விட்டம் சுமார் 500 மீட்டர் என்று கூறப்படுகிறது. இந்த விண்கல் கரிம-வகையை சார்ந்தது.
அதாவது, இதில் ஹைட்ரோகார்பன்கள், கரிம அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற கரிம பொருட்களால் நிரம்பியுள்ளது. பென்னு சிறுகோளின் மேற்பரப்பில் பல பள்ளங்கள் மற்றும் குழிகள் உள்ளன. இந்த பள்ளங்கள் மற்றும் குழிகள் சிறுகோள் பிற விண்பொருட்களுடன் மோதியதன் விளைவாக உருவானதாக கூறப்படுகிறது.
மேலும், பென்னு சிறுகோளின் மேற்பரப்பில் கரிம பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இந்த கரிம பொருட்கள் பூமியில் உயிர் தோன்றியதற்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பென்னு சிறுகோளில் இருந்து மாதிரிகள் சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காக, பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, “ஒசிரிஸ்-ரெக்ஸ்” என்ற விண்கலத்தை கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி கெப்ளர் ஏவுதளத்திலிருந்து ஏவியது. ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2018 திசம்பர் 3 அன்று பென்னு சிறுகோளை சென்றடைந்தது.
2020-ஆம் ஆண்டு, பென்னு சிறுகோளின் மேற்பரப்பில் இருந்து மண் மாதிரிகளை சேகரிக்க தொடங்கியது. பின்னர், மாதிரிகளை சேகரித்த பின்னர் ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
இப்படி பல ஆண்டுகள் பயணத்தை கடந்து இந்த மாதிரிகளை கொண்டுள்ள ‘ஒசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலத்தின் காப்ஸ்யூல் நேற்று (செப்டம்பர் 24, 2023) பூமிக்கு கொண்டு வரப்பட்டது. பென்னுவின் மேற்பரப்பிலிருந்து 60 கிராம் முதல் 600 கிராம் எடையுள்ள மாதிரியை சேகரித்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதன் சராசரி அளவு குறித்து தெரிவியவில்லை.
இதற்கு முன்னதாக, ஜப்பானின் ஹயபுசா விண்கலம் பென்னு சிறுகோளின் மேற்பரப்பிலிருந்து மாதிரிகளை பொருட்களை சேகரித்தது, அவை பூமிக்கு திரும்பியது. இந்த விண்கலம் சிறிய அளவிலான மாதிரிகளை மட்டுமே பூமிக்கு சேகரித்து கொண்டு வந்தது. ஆனால், நாசாவின் ஒசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் அதிகமான மாதிரிகளை சேகரித்து வந்துள்ளதால், கூடுதலாக ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென்னு சிறுகோள் பற்றிய ஆராய்ச்சியானது, சூரிய மண்டலத்தின் தோற்றம் மற்றும் பூமியில் உயிர் தோன்றியதற்கான காரணிகள் குறித்து அறிய தகவல்களை கண்டறிய உதவும். இந்நிலையில், பென்னு சிறுகோள் மீது பல விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பென்னு சிறுகோள் பற்றிய ஆராய்ச்சியானது மிகவும் சவாலானதாக உள்ளது.
இந்த மாதிரிகள், பென்னுவின் வயது, உருவாக்கம் மற்றும் அதன் வேதியியல் கலவை பற்றிய தகவல்களை சேகரிக்க உதவுகிறது. இந்த மாதிரிகள் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில், முக்கியமான கூறுகள் கிடைக்கக்கூடும் என்பதால், இந்த ஆய்வுகள் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.