கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் : அருட்தந்தை மா.சத்திவேல் அறிக்கை.
தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்தவர்கள் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உட்பட ஏனையோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிடத்தும், ஒட்டு மொத்த தியாக தீபம் திலீபன் உணர்வாளர்களிடத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்பு துறை ஜனாதிபதியிடமே உள்ளது. அவரின் பிரதிநிதியாக மாகாணத்தில் செயல்படும் ஆளுனர்,அவர் தனது கடமையை செய்ய தவறி விட்டு அமைதியாக வீதியில் பயணித்த நினைவஞ்சலி குழுவினரை குற்றம் சாட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தியாக தீபம் திலீபனின் அகிம்சை உணர்வோடு கூறுகின்றோம் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கஜேந்திரன் நேரடியாக அரசின் பாதுகாப்பை மறுத்து இருந்தாலும் அவருக்கான பாதுகாப்பை தனது மாகாணத்தில் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாகாண ஆளுநருக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.தாக்குதலுக்கு இடம் அளித்த பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளே. மாகாண மட்டத்தில் அவருக்கு பொறுப்பாக இருக்கின்றவர்களும் குற்றவாளிகளே. ஆளுநரும் குற்றவாளியே அவர் தெரிவித்தார்.