விறைத்த நிலையில் சிறுவன் உடல் மீட்பு! இரு குழந்தைகள் ஆபத்தான நிலை!!
கொடூர குடும்ப வன்முறை 29 வயதான தந்தை கைது
படம் :குடும்ப வன்முறை நடந்த குடியிருப்புக் கட்டடம்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸின் தெற்கே பெர்ப்பினியான் (Perpignan) நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஏழு வயதான சிறுவன் ஒருவன் குளிரால் பாதியளவு உடல் விறைத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
தகவல் ஒன்றை அடுத்துப் பொலீஸார் அந்த மாடிக் குடியிருப்பு வீட்டிற்கு வந்த போது சிறுவனின் உடல் குளியலறைத் தொட்டியில் கிடந்தது. அருகே சிறிய உறைகுளிர்சாதனப் பெட்டி ஒன்றும் காணப்பட்டது. சிறுவன் அந்தப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டுக் குளிரில் விறைத்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பொலீஸார் அங்கு வருகை தந்த போது 29 வயதான தந்தை தனது கழுத்தில் கேபிள் கம்பி ஒன்றை இறுக்கியவாறு உயிரைமாய்க்க முயற்சித்துள்ளார். அதனைத் தடுத்த பொலீஸார் பின்னர் அவரைக் கைதுசெய்தனர். அதேசமயம் அந்தத் தந்தையின் சகோதரர் எனக் கூறப்படும் 33 வயதான ஆண் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளைக் கடுமையான உடற் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
2 மற்றும் 3 வயதுகளையுடைய அந்த இரு குழந்தைகளும் உயிரிழந்த சிறுவனது சகோதரிகள் என்றும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவர்கள் இருவருக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தவரையும் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
குடும்ப வன்முறை தொடர்பாக இருவர் மீதும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்தன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
உயிரிழந்த சிறுவனும் இரண்டு பெண் குழந்தைகளும் தந்தை மற்றும் அவரது சகோதரர் இருவராலும் வீட்டில் வைத்துக் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டுவந்துள்ளனர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குழந்தைகளது தாயார் ஒரு மனநோயாளி என்று கூறப்படுகிறது.
⚫போலி மரணச் சான்றிதழ்
பெர்ப்பினியான் நகர வாசிகளை அதிரவைத்துள்ள இந்தக் கொடூரக் குடும்ப வன்முறை பற்றிய தகவல் பொலீஸாருக்கு எவ்வாறு தெரியவந்தது என்ற விவரத்தை உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
மரணச் சடங்கு சேவைகளை ஒழுங்குபடுத்தும் நிலையம் ஒன்றைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்தத் தந்தை அல்ஜீரியாவில் உயிரிழந்த தனது மகனது உடலை எடுத்துவந்து அடக்கம் செய்வதற்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். சிறுவனது மரண அத்தாட்சிச் சான்றிதழ் ஒன்றையும் ஈ-மெயிலில் அனுப்பியிருக்கிறார். அவரது விளக்கங்களால் சந்தேகமடைந்த மரண சேவை நிறுவனத்தினர் மரணச் சான்றிதழில் ஒப்பமிட்டிருந்த மருத்துவ அதிகாரியைத் தொடர்பு கொண்டு வினவினர். அவ்வாறு ஒரு சான்றிதழைத் தான் யாருக்கும் வழங்கவில்லை என்றும் அது ஒரு போலி ஆவணம் என்றும் அந்த மருத்துவர் கூறியிருக்கிறார். அதனை அடுத்தே அது குறித்துப் பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாகக் குடியிருப்புக்கு விரைந்து சென்ற பொலீஸார் அங்கு அதிர்ச்சியளிக்கும் காட்சிகளைக் கண்டனர்.
சிறுவனது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அவனது உடல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபராகிய தந்தை மற்றும் அவரது சகோதரர் இருவர் மீதும் “15 வயதுக்குட்பட்ட சிறுவர் கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் உடலை மறைத்தல், சித்திரவதை, போலி ஆவணங்களைத் தயாரித்தமை, பயன்படுத்தியமை” போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவுள்ளன என்று அரச சட்டவாளர் அறிவித்திருக்கிறார்.