பாரிஸில் டெங்கு நோயாளிகள்! நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்.

மருந்து விசிறும் பணிகள் இரவுவேளை முன்னெடுப்பு.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

 

பாரிஸின் சில பகுதிகளில் கடந்த வெள்ளி – சனி இரவுப் பொழுதில் டெங்கு நுளம்புகளை அழிக்க மருந்து விசுறும் பணி முன்னெடுக்கப்பட்டது. டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இருவர் ஷத்திலியோன்(Châtillon – Hauts-de-Seine) பகுதியில் கண்டறியப்பட்டதை அடுத்தே அங்கு வீதிகளிலும் பொது இடங்களிலும் மருந்து விசிறப்பட்டது.

ஷத்திலியோன் நகர நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் பிராந்திய சுகாதாரத் துறையினரால் (l’agence régionale de santé – ARS) நுளம்பு ஒழிப்புப் பணி இரவு 11.30 முதல் அதிகாலை 02.30 வரை முன்னெடுக்கப்பட்டது.”வாகனங்கள் சகிதம் கருவிகளுடன் முகமூடி அணிந்த பணியாளர்கள் வீதிகளில் தென்பட்டதைத் தாங்கள் வியப்புடன் கண்டனர்” என்று நகர வாசிகள் சிலர் கூறியுள்ளனர்.

டெங்கு வைரஸைப் பரப்புகின்ற-புலி நுளம்பு (“tiger mosquito”) என்று அறியப்படும் – ஏடிஸ் அல்போபிக்ரஸ் (Aedes albopictus mosquito) நுளம்பு இனங்கள் சமீப ஆண்டுகளாக பிரான்ஸின் பெருநிலப்பரப்பில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த இவ்வகை நுளம்புகள் பாரிஸ் பிராந்தியத்திலும் இனப்பெருக்கமடைவது தெரியவந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் (Antilles) இருந்து வந்து ஷத்திலியோன் நகரில் தங்கியிருந்த இரண்டு பேருக்கே டெங்குக் காய்ச்சல் தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.  அதனை அடுத்தே அதிகாரிகள் உஷாரடைந்துள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">