மொரோக்கோவை இராப்பொழுதில் பெரும் பூகம்பம் தாக்கியது!
800 பேருக்கு மேல் மரணம்!! சர்வதேச உதவிகள் விரைவு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மொரோக்கோ நாட்டின் மத்திய பகுதியை அதி சக்திவாய்ந்த நில நடுக்கம் தாக்கியுள்ளது. வெள்ளி-சனி இரவுப் பொழுதில் நேர்ந்துள்ள இந்தப் பேரனர்த்தத்தில் இதுவரை குறைந்தது 820 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ரிச்டர் அளவில் 6.8 எனப் பதிவாகிய நில நடுக்கம் பிரபல மராகேஷ் உல்லாச நகருக்குத் தென் மேற்கே அல் ஹௌஸ் (Al-Haouz) மாகாணத்தை மையமாகக் கொண்டு பரந்த பிரதேசங்களைத் தாக்கிச் சேதப்படுத்தி உள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களாகிய ரபாத்(Rabat) , காசாபிளாங்கா (Casablanca) , அகாதிர்(Agadir) மற்றும் எஸ்ஸௌயிரா(Essaouira) போன்ற இடங்களிலும் பலமான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. பீதியடைந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் ஓடுகின்ற காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
“இரவு 11 மணியளவில், நாங்கள் மிகவும் பலமான குலுக்கலை உணர்ந்தோம், அது ஒரு பூகம்பம் என்பதை உணர்ந்தேன். கட்டடங்கள் நகர்வதைக் கண்டேன். அவ்வாறான சூழ்நிலையில் எங்களிடம் பொறுத்துப் பார்க்கும் மனநிலை இருக்குமா? நான் வெளியே ஓடிச் சென்றேன், வெளியே நிறைய பேர் நின்றிருந்தனர். மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் உறைந்திருந்தனர். குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன,பெற்றோர்கள் கலக்கமடைந்துகாணப்பட்டனர்.. ”
இவ்வாறு மராகேஷில் வசிக்கும் அப்தெல்ஹாக் எல் அம்ரானி என்பவர் அங்கிருந்து தொலைபேசி மூலம் ஏஎப்பி(AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் சேதங்களது தற்போதைய உத்தேச மதிப்பீடுகள் மேலும் உயரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொரோக்கோ செய்தி ஊடகங்களின் தகவல்களின் படி நாட்டைத் தாக்கிய அனர்த்தங்களில் இந்த நில நடுக்கமே மிகத் தீவிரமானது என்று கூறப்படுகிறது.
மொரோக்கோவில் உள்ள பிரான்ஸின் தூதரகம் நெருக்கடிகாலப் பணிமனை ஒன்றைத் திறந்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரெஞ்சு பிரஜைகளும் ஏனையோரும் தகவல் பெற வசதியாக +212 537689900 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, துருக்கி போன்ற நாடுகள் மீட்பு மற்றும் உதவிக் குழுக்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பத் தயாராகி வருகின்றன. பூகம்ம அனர்த்தம் தொடர்பான மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.