ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 வெளியிடும் காணொளி:  இலங்கை அரசின் பதில்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 வெளியிடும் காணொளியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதுஇ இதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டதாக தெரிவித்தார்.கோரிக்கைகளை விசாரிப்பதற்காக சர்வதேச உதவிகளைப் பெறுவது குறித்தும் அரசாங்கம் கலந்துரையாடியதாகவும்,  தேவைப்பட்டால் அரசாங்கம் அதனைச் செய்யும் என்றும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் வேளையில் செனல் 4 போன்ற செய்தித் தளங்கள் காணொளிகளை வெளியிடுவது வழமையான நடைமுறையாகும் என அவர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்தார். எவ்வாறாயினும், காணொளியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிச்சயமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தாம் கருதுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இலங்கையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியின் ட்ரெய்லரையும் பிரித்தானியாவின் செனல் 4 வௌியிட்டுள்ளது.அதன் முழு வீடியோ பிரித்தானிய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஏப்ரல் தாக்குதல் குண்டுதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் த டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் வௌிப்படுத்தலுக்கு அமைய இது அமைந்துள்ளது. வெளியான ட்ரெய்லரின்படி, தொலைதூரப் பண்ணையில் அப்போதைய இராணுவப் புலனாய்வு பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்தது தாம் என ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு பிள்ளையான் என்ற இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் தன்னிடம் கோரியதாக  ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி, அதிகார மாற்றத்தை எளிதாக்க வேண்டும் என்ற வகையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக செனல் 4 வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.