‘கார்ட்போட் மட்டையில் தயாரித்த ட்ரோன்கள் ரஷ்ய வான்தளம் மீது தாக்குதல்!

Kumarathasan Karthigesu-பாரிஸ்
மலிவான புதிய ஆயுதம்

 

ஆஸ்திரேலியாவின் சைபாக் (Sypaq) நிறுவனத்தினால் மிக மலிவாகத் தயாரிக்கப்படுகின்ற கோர்வோ என்ற ட்ரோன்களை (Corvo drones) உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்கு எதிரான பல தாக்குதல்களுக்குப் பயன்படுத்தி வருகின்றன.

பிட்சா அட்டைப் பெட்டிகளை (pizza box) ஒத்த கார்ட்போட் (cardboard) மட்டைகளில் இறப்பர் பான்ட், பசை போன்றவற்றைக் கொண்டு மிக இலகுவாகத் தயாரிக்கப்படுகின்ற இந்த ட்ரோன்கள் ஐந்து கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு 125 கிலோமீற்றர்கள் தூரம் பறக்கக் கூடியவை. ரடார்கள் மற்றும் வான் காப்பு சாதனங்களில் இலகுவில் சிக்காமல் தப்பிச் செல்லக் கூடியவை. மழை நீரில் நனைந்தால் மட்டுமே இலக்குத் தவறவிடும். மற்றபடி போர் முனைகளில் உளவு வேலைகள், உணவு வழங்கல், இலக்குகளைத் தாக்குதல் போன்ற பல நோக்கங்களுக்காக இவை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஞாயிறன்று ரஷ்யாவின் எல்லைக்குள் அமைந்துள்ள கேர்க்ஸ் (Kursk) பிராந்தியத்தில் அங்குள்ள வான் தளம் உட்பட சில இலக்குகள் மீது மேற்கொள்ளபட்ட குண்டுத் தாக்குதல்கள் உட்பட வெற்றிகரமான பல தாக்குதல்கள் இவ்வாறு கார்ட்போட் டில் தயாரித்த கோர்வோ ட்ரோன்கள் மூலமே நடத்தப்பட்டன என்று உக்ரைன் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

போரில் உக்ரைனும் ரஷ்யாவும் ட்ரோன் மூலமான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷ்யத் தலைநகரமான மொஸ்கோ மீதும் உக்ரைன் தரப்பினால் உரிமைகோரப்படாத ட்ரோன் தாக்குதல்கள் அடிக்கடி நடக்கின்றன. வான் பாதுகாப்புச் சாதனங்கள் சில சமயங்களில் அவற்றைத் தடுக்காமல் கோட்டை விடுவதால் ட்ரோன்கள் மிக உயர்ந்த கட்டடங்களில் மோதிச் சிறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">