பாரிஸ் நோத்-டாம் திருத்தப் பணிக்குத் தலைமை வகித்த முன்னாள் ஜெனரல் உயிரிழப்பு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரெஞ்சுப் படைகளது முன்னாள் ஐந்து நட்சத்திர ஜெனரலாகிய ஜோன் – லூயி ஜோர்ஜ்லின் (Jean-Louis Georgelin) விபத்துச் சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளார். 74 வயதான அவர், நாட்டின் தென் பகுதியில் பிரெணி மலைத் தொடர்ப்பகுதியில் (Pyrenees mountain) மலையேறும் பயணத்தின் போது வழியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் – ஸ்பெயின் எல்லையில் அமைந்துள்ள மலைப் பகுதிக்குத் தனியாளாகச் சென்றிருந்த அவர் மலையேறும் வழியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மலையேறச் சென்றவர் திரும்பி வரவில்லை என்ற தகவல் கடல்மட்டத்தில் இருந்து 2ஆயிரத்து 246 மீற்றர்கள் உயரத்தில் Mont-Valier மலைக்குச் சற்றுக் கீழே உள்ள மலைப்பகுதிக் காவல் நிலை ஒன்றில் இருந்து மீட்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அங்கு தேடுதல்களை நடத்திய வீரர்கள் ஆண் ஒருவரது சடலத்தைக் கண்டுபிடித்தனர். அது ஜெனரல் ஜோன் – லூயி ஜோர்ஜ்லின் உடல் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
Photo :Emmanuel Macron “x” screen shot
கடந்த 2019 இல் தீக்கிரையாகிய பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமும் உலகப் புகழ் வாய்ந்ததுமாகிய நோத் – டாம்(Notre-Dame) மாதா தேவாலயத்தின் மீள் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை அதிபர் மக்ரோன் ஜெனரல் ஜோர்ஜ்லினிடமே ஒப்படைத்திருந்தார். தேவாலயத்தை அதன் முந்திய தனித்தன்மையுடன் மீளக் கட்டியெழுப்புகின்ற சிக்கலான பணியை மிகுந்த அர்ப்பணிப்புடன் வெற்றிகரமாக முன்னெடுத்து வந்த சமயத்திலேயே இடைநடுவில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்திருக்கிறார்.
ஜெனரலின் மரணம் அறிவிக்கப்பட்ட கையோடு அரசியல் மற்றும் பாதுகாப்பு மட்டங்களில் இருந்து அனுதாபச் செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன.
“நோத்-டாம் தேவாலயம் அதன் மறுபிறப்பின் பிதாமகரை இழந்து விட்டது. தேசம் நல்லதோரு சேவையாளரை இழந்துவிட்டது” என்று அதிபர் மக்ரோன் தனது அஞ்சலிப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். புனரமைப்புக்காக மனித மற்றும் நிறுவன வளங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தும் வித்தை தெரிந்த ஒரே நபர் என்று அவரை வர்ணித்துள்ளார் பாரிஸ் மேயர் ஆன் கிடல்கோ.
இராணுவத்தில் மிகவும் ஒழுக்கமும் மதிப்பும் வாய்ந்தவராக விளங்கிய ஜெனரல் ஜோர்ஜ்லின், 2006-2010 ஆண்டு காலப்பகுதியில் பிரெஞ்சுப் படைகளது தலைமைத் தளகர்த்தராகப் (Chief of Staff of the French armies) பதவி வகித்திருந்தார். ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட், மற்றும் பல்கன், ஆப்கானிஸ்தான், லெபனான் போன்ற இடங்களில் பிரான்ஸின் படை நடவடிக்கைகளை வழிநடத்தி மேற்பார்வை செய்த போர் அனுபவம் வாய்ந்தவர்.
ஆழமான கத்தோலிக்க மதப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அவரது திடீர் மறைவுச் செய்தி பிரான்ஸின் கத்தோலிக்க மத சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.