ஆயிரக்கணக்கான புதிய கார்களுடன் எரியும் கப்பலைக் கட்டி இழுக்க முயற்சி!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

இந்திய மாலுமிகள் மீட்பு!! ஒருவர் பலி! சிலர் காயம்!

எலெக்ட்ரிக் கார் பற்றறியே தீப்பற்றியதாகச் சந்தேகம்?

 

நெதர்லாந்தின் வட கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான புதிய கார்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த “ஃப்ரீமன்டில் ஹைவே” (“Fremantle Highway”) என்ற சரக்குக் கப்பலில் பெரும் தீ பரவியிருக்கிறது. கடந்த செவ்வாயன்று திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் பரவியதை அடுத்து  அதிலிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த 22 மாலுமிகளும் நெதர்லாந்தின் கரையோரப் படைகளால் ஒருவாறு மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தீப் புகை காரணமாக உயிரிழந்தார். சிலர் காயமடைந்துள்ளனர்.

பனாமா நாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த அந்தக் கப்பல் ஜேர்மனியின் ப்ரெமர்ஹாவன் (Bremerhaven) துறைமுகத்தில் இருந்து எகிப்து நாட்டின் போர்ட் சாய்த் (Port-Saïd) துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பின்னர் அங்கிருந்து அது சிங்கப்பூர் பயணமாக இருந்தது. 200 மீற்றர் நீளமும் 18,500 தொன் எடையும் கொண்ட அதில் மூவாயிரத்து 783 புதிய கார்கள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றில் 438 எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும்.

அந்தக் கப்பலை வாடகைக்கு அமர்த்தியிருந்த “கே லைன்”(“K Line”)  என்ற போக்குவரத்துக் கம்பனி இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

       Photo:AFP

கப்பலில் தீப்பிடித்தமைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் நெதர்லாந்து செய்தி ஊடகங்களின் தகவலின்படி எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றின் பற்றரியில் இருந்தே முதலில் தீ பரவியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தீயை அணைப்பதற்காக வீசப்பட்ட தண்ணீர் கப்பலை நிலைதளம்பச் செய்ததன் காரணமாக அந்த முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டன.

வடகடலுக்கும் வாடன் கடலுக்கும் (North Sea and the Wadden Sea) இடையே நெதர்லாந்தின் Terschelling தீவிலிருந்து 18 கிலோமீற்றர்கள் தொலைவில் எரிகின்ற அந்தக் கப்பலில் இருந்து வாகனங்களது எரிபொருள் மற்றும் நச்சுப் பதார்த்தங்கள் கடலில் கலக்கத் தொடங்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. கப்பல் தரித்துள்ள கடற்பகுதி யுனெஸ்கோவால் உலகின் பாரம்பரியம் மிக்க பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடமாகும். (UNESCO World Heritage Site). அத்துடன் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நீர்வாழ், நிலம் வாழ் உயிரினங்கள் நிறைந்த பகுதியுமாகும். எரிகின்ற கப்பலால் அங்கு ஏற்படக்கூடிய பேரழிவைத் தவிர்ப்பதற்காகக் கப்பலை அந்த இடத்தில் இருந்து வேறு ஒரு பகுதிக்கு நகர்த்துவதற்காக அதனைக் கட்டி இழுக்கும் தீவிரமான பணி தொடக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார்களது பற்றறிகள் அவற்றை நீண்ட தூரம் நகர்த்தும் பயணங்களின் போது தீப் பற்றும் ஆபத்து இருப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுவதால் பற்றறிகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் மேலும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">