மத்திய தரையில் எரியும் தீவுகள்! தீயணைப்பு விமானம் வீழ்ந்து நொறுங்கி விமானிகள் பலி!
"விவிலியப் பேரழிவு..!" "நெருப்புத் துரத்துவதை நேரில் கண்டோம்" - செவ்வி
படம் :தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த கிரேக்க விமானப் படையின் 355வது தந்திரோபாய போக்குவரத்துப் படைப் பிரிவைச் சேர்ந்த விமானி கப்டன் கிறிஸ்டோஸ் மௌலாஸ் (வயது34) மற்றும் துணை விமானி இரண்டாம் லெப்டினன்ட் பெரிக்லிஸ் ஸ்டெபானிடிஸ் (வயது27) ஆகியோர்.
இரவுபகலாக ஈடுபட்டுவருகின்றனர். பிரான்ஸ் உட்பட ஒன்றிய நாடுகளும் அந்தப்பணியில் இணைந்துள்ளன.
ஈயூபோயா (Euboea) தீவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேக்க வான் படையின் தண்ணீர்த் தாரை விமானம்(Canadair CL-215) ஒன்று நேற்றுத் தீப்பிடித்து எரிந்து வீழ்ந்து நொறுங்கியுள்ளது. அதிலிருந்த இரண்டு இளம் விமானிகளும் உயிரிழந்து விட்டனர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விமானம் எரிந்து வீழ்ந்த இடத்தை மீட்புப் பணியினர் கண்டு பிடித்துள்ளனர்.
இம்முறை கிரேக்க நாடு கடும் வெப்பம் காரணமாக மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் தற்போதைய நிலைவரத்தை”நெருப்புக்கு எதிரான போர்” என்று அந்நாட்டின் பிரதமர்
கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்(Kyriakos Mitsotakis) பிரகடனம் செய்துள்ளார். வெப்ப அனல் கிரேக்க நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது.
கிரேக்கத் தீவுகளில் எரியும் நெருப்பு. விண்வெளியில் இருந்து நாசா வெளியிட்ட படம்.
“இது ஒரு விவிலியப் பேரழிவு போன்றது “(biblical catastrophe) என்று பற்றியெரிந்து கொண்டிருக்கும் ரொட்ஸ் தீவின் நிலைவரத்தை அங்கு வசிக்கின்ற இளம் பெண் ஒருவர் பிபிசியிடம் வர்ணித்திருக்கிறார்.
தங்களை விரட்டிவருகின்ற நெருப்பில் இருந்து உல்லாசப் பயணிகள் பலரும் ஓடித் தப்பி வெளியேறுகின்ற காட்சிகள் சமூக ஊடகங்களை நிறைத்துள்ளன.
பதற்றமும் பீதியும் எல்லோரிடமும் காணப்படுகிறது. பின்னால் நெருப்புத் துரத்திவர அதிலிருந்து தப்புவதற்காக ஓடிக் கொண்டிருந்த பலரை நேரில் கண்டதாகப் பிரெஞ்சு உல்லாசப் பயணி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
குதூகலமாகத் தொடங்கிய கோடை விடுமுறைப் பயணங்கள் பெரும் குழப்பத்தில் முடிந்துள்ளன. தீவுகளில் இருந்து வெளியேறுவதற்காக மேலும் பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டவர்கள் விமானங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.
விமான சேவை நிறுவனங்கள் சில கிரேக்கத் தீவுகளுக்கான சேவைகளை இடைநிறுத்தியிருக்கின்றன.
போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, குரோசியா போன்ற நாடுகளிலும் புதிதாகக் காட்டுத் தீ மூண்டிருக்கின்றது.
கனடா முதல் இத்தாலி வரை – அமெரிக்கா முதல் சீனா வரை-உலகின் பெரும் பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற தற்போதைய கடும் வெப்பத்தை இயற்கை அனர்த்தம் என்று கூறிவிட முடியாது. இது மனித நடவடிக்கைகள்- தலையீடுகள்- காரணமாக உருவாகிய ஊழிப் பேரழிவு என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.