தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினையே இந்தியா வலியுறுத்த வேண்டும் :தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம்

தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினையே இந்தியா வலியுறுத்த வேண்டும் என கோருகின்ற கடிதமொன்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று இந்திய துணைத் தூதுவரிடம் கையளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியில், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் இவ்வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளன.இவ்வாறானதொரு பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினையே இந்தியா வலியுறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்குப் பொறுப்பான அதிகாரி ராகேஷ் நட்ராஜ் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கவுள்ளது.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் வேண்டாம் எனவும், அதனை இந்தியா வலியுறுத்தக்கூடாது எனவும் தொடர்ச்சியாகக் கூறிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் மாத்திரமே தீர்வு காண முடியும் என்றும், அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது இது குறித்து அவரிடம் எடுத்துக்கூறியிருந்ததாகவும், ‘இந்திய – இலங்கை ஒப்பந்தம் வேறு, அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் வேறு’ என்ற விடயத்தை விசேடமாக சுட்டிக்காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்திய – இலங்கை ஒப்பந்தம்தான் இந்தியாவின் நேரடித் தலையீட்டின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும், 13ஆவது திருத்தம் என்பது அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற பேரில் இலங்கை அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.