தொழில்கட்சியின் நிதி திரட்டுதல் இரவு விருந்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ் இளையோர் அணி.
பிரித்தானிய தொழில்க்கட்சியினரின் தேர்தல் பிரச்சார நிதி சேகரிப்புக்கான இரவு விருந்து ஒன்று கூடலில் கலந்துகொண்ட தமிழ் இளையோர் அணி அங்கு வருகை தந்திருந்த தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இலங்கை இராணுவ தளபதியும் இனப்படுகொலை குற்றவாளியுமாகிய சவேந்திர சில்வாக்கு எதிராக பிரித்தானிய தடை விதிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை எடுத்து விளக்கியதுடன், பிரித்தானிய அரசு உடன் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58வது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழிநடத்திய சவேந்திர சில்வாவை தடை செய்ய போதுமான ஆதாரங்களை யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் (ITJP) கடந்த ஏப்ரல் 2021 இல், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது.
ஆனால் இதுவரையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சால் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பிலான தொடர் சந்திப்புகளை இளையோர் அணி மற்றும் சித்திரவதையில் தப்பித்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தமிழர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறை என பலர் கலந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.
இந்த வகையிலே ஜூலை 4 ஆம் திகதி நடைபெற்ற பிரித்தானிய தொழிற் கட்சியின் தேர்தலுக்கான நிதி சேகரிப்பு இரவு விருந்து ஒன்று கூடலில் கலந்து கொண்ட தொழிற் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்த இளையோர் அணி அதனை சவேந்திர சில்வாவுக்கு எதிரான பிரச்சாரத்துக்கான களமாக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த விடயம் நிழல் வெளிவிவகார அமைச்சர் கௌரவ. டேவிட் லாம்மி (Hon David Lammy- Shadow Foreign Affairs Minister) தனது உரையில், தொழிலாளர் கட்சி தமிழ் இலங்கை மக்களின் போராட்டங்களை அறிந்திருப்பதாகவும், அடுத்த தேர்தலில் அவர் வெளியுறவு செயலாளராக பதவியேற்றால், தொழிலாளர் கட்சி அவர்களுக்கு நம்
பிக்கையை அளித்து அவர்களின் நலன் பேணப்படுவதை உறுதி செய்யும் என்றும் கூறினார்.மேலும் மெர்டன் கவுன்சிலின் தலைவரான ரோஸ் கரோட்(Ross Garrod), மைக் ப்ரண்ட்(Mike Brunt) மேயர், கோலியர்ஸ்வுட்டில் இருந்து மெர்டன் கவுன்சிலர் கரோலின் கூப்பர் மார்பியா(Caroline Cooper Marbiah), மெர்டனின் கவுன்சிலரான ஸ்டீபன் அலம்பிரிடிஸ்(Stephen Alambritis), சவுந்திர சில்வாவை தடைசெய்யவும் என்ற பதாகையை ஏந்தி சவேந்திர சில்வாவை தடை செய்யும் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தனர்.
தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவரான திரு. சென் கந்தையா அவர்களின் தலைமையில் செயற்பாட்டாளர்களான விஜய் விவேகானந்தன், வாகீசன் விசாகரெட்ணம், கனகசபாபதி கார்த்திகேசன், மொஹமட் நிஃப்ராஸ் மொஹமட் நவ்ஃபர், நிஷாந்தன் நித்தியானந்தன், அமல்ராஜ் ஜெயக்குமார், தேவராசா கஜன், மனோஜ் பிரசன்னா, ரொனிஸ்டன் ஆண்டனிஸ் உதஜகுமாரன், ராஜசேகர் ராமகிருஷ்ணன், சசீஸ்கண்ணா நடராஜா, சேனவிரத்ன பண்டார, விதுரா விவேகானந்தன், மற்றும் நாகரத்தினம் சாண்டில்யன் ஆகியோர் கொண்ட அணியே மேற்படி பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்களுக்கு இது மற்றொரு வெற்றி.