அடிப்படை உரிமைகள் மீறல் என்று நீதிமன்றம் சென்றிருந்தால் விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்திருக்க  முடியாது – சாகர காரியவசம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு  அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தை அப்போது எவரேனும் அடிப்படை உரிமைகள் மீறல் என்று நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்நேற்று இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ‘நாட்டின்  மொத்த சனத் தொகைக்கும், நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன . 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக காணப்பட்டது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் அந்த எண்ணிக்கை 17 ஆக அதிகரிக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கையின் தாமத நிலை நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்து விட கூடாது. நீதிமன்ற நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தினால் பல வழக்குகளை துரிதமாக முடிக்க முடியும்.உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களின் விடயதானங்கள் வரையறை செய்யப்பட வேண்டும்.

விடுதலை  புலிகள் அமைப்பை அழிப்பதற்கு  அரசு கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தை அப்போது எவரேனும் அடிப்படை உரிமை மீறல் என்று நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது. எனவே கொள்கை ரீதியில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது நாட்டுக்கு பொருத்தமற்றது என அவர் தெரிவித்தார்.