கடைகள் சூறை! சொத்துகள் தீக்கிரை !! கலகத் தடுப்புக் கவச வாகனங்கள் சேவைக்கு !
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பொதுப் பாதுகாப்பு கருதி பெரும் நிகழ்ச்சிகள் ரத்து!!உயிரிழந்த இளைஞனின் உடல் சனிக்கிழமை அடக்கம்.
அதேசமயம் இன்னிசை நிகழ்ச்சிகள் உட்படப் பெரிய அளவில் மக்கள் திரளும் வைபவங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுகின்றன (l'”annulation d’évènements de grande ampleur”) என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
கனடா பாடகி மைலீன் பார்மரின் (Mylène Farmer) இன்னிசை ரத்து
கலவரங்களை அடுத்து நாடெங்கும் கோடைகால விழாக்கள் பல ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் ஸ்ரட்- து- பிரான்ஸ் (Stade de France) விளையாட்டு அரங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் நடைபெறவிருந்த கனடாவில் பிறந்த பிரெஞ்சுப் பாடகி மைலீன் பார்மரின் (Mylène Farmer) பெரும் இன்னிசைக் கச்சேரி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நகரப் புற வன்செயல்கள் தொடர்ந்து நான்காவது நாளாகத் தீவிரமடைந்து வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட பஸ் வண்டிகள் உட்படப் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடைகள், பெரும் வர்த்தக மையங்கள் தாக்கி உடைக்கப்பட்டுப் பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன. பாரிஸின் புற நகரங்களில் தமிழர்களால் நடத்தப்படுகின்ற வர்த்தக நிறுவனங்கள் உட்படப் பல கடைகள் தீக்கிரையாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் பஸ் மற்றும் ட்ராம் சேவைகளை இரவு ஒன்பது மணியுடன் நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் சகல பொலீஸ் நிலையங்களையும் பணித்துள்ளார்
நாட்டின் பல பகுதிகளில் பல்பொருள் வர்த்தக மையங்கள் சில மூடப்பட்டிருக்கின்றன. பாரிஸ் புறநகராகிய ரொணி – 2 பகுதியில் அமைந்துள்ள வர்த்தக மையம் (centre commercial Rosny 2,) இன்று மாலை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கானது. மூடப்பட்டிருந்த வர்த்தக மையமயத்தின் இரும்புக் கதவை உடைத்துத் திறந்து உள்நுழைந்த சிலர் அங்குள்ள மக்டொனால்ஸ் (McDonald’s) உணவகத்தின் இருக்கைளை அடித்து நொறுக்கி நாசமாக்கினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரொணி ரயில் நிலையத்திலும் (la gare RER de Rosny) இருக்கைகள் சேதமாக்கப்பட்டன.
சில அசம்பாவித சம்பவங்களை அடுத்துப் பாரிஸின் புறநகரில் உள்ள கிறித்தை சொலேய் வர்த்தக மையம் (Le centre commercial Créteil Soleil) பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சுடப்பட்டு இறந்த 17 வயதான நாஹெலின் (Nahel) உடல் அடக்கம் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை நொந்தேர் (Nanterre) நகர மேயர் அறிவித்திருக்கிறார்.