இல்-து-பிரான்ஸில் சில நகர சபைகளில் இரவு ஊரடங்கு!
421 பேர் நாடெங்கும் கைது ,வாண வெடிகளை ஏவி இளையோர் வன்முறை.
Kumarathasan Karthigesu-பாரிஸ் .
நகரப்புற வன்செயல்கள் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காகப் பாரிஸ் பிராந்தியத்தில்(Île-de-France) சில நகரசபைப் பிரிவுகளில் நேற்றிரவு உள்ளூர் மட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து திங்கட்கிழமை வரை இவ்வாறு இரவு ஊரடங்கை அமுல் செய்ய நகரசபை முதல்வர்கள் தீர்மானித்துள்ளனர்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற புற நகரங்களில் ஒன்றாகிய நியூலி-சூ -மான் (Neuilly-sur-Marne – Seine–Denis) நகரம் கடந்த இரவுகளில் நடந்த வன்செயல்களால் பெருமளவில் சேதங்களைச் சந்தித்தது. அங்கு நேற்று இரவு 23. 00மணி முதல் இன்று வெள்ளி காலை 06.00 மணிவரை உள்ளூர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பொலீஸ் நிலையம் ஒன்றும் பொலீஸாரது ஏழு வாகனங்களும் அங்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
ஹூத் – து-செய்ன் (Hauts-de-Seine) மாவட்டத்தின் கிளமா நகரத்திலும் (ville de Clamart) இரவு ஒன்பது மணி முதல் இன்று காலை ஆறு மணிவரை ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.
அங்கு புதன்கிழமை இரவு மூண்ட வன்செயல்களின் போது ட்ராம் தொடரூந்து குண்டர் கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டது.
இளையோருக்கு ஊரடங்கு!
தமிழர்கள் வசிக்கின்ற மற்றொரு நகரமாகிய சவினி- லு – தொம்பிள் (Savigny-le-Temple – Seine-et-Marne) பகுதியில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கு மட்டுமான ஊரடங்கு (couvre-feu a été décrété pour les mineurs) நேற்றிரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. பாரிஸ் புற நகரங்களில் கலவரங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் 14-18 வயதுக்கு இடைப்பட்ட பதின்ம வயதினரே என்பதால் அத்தகைய இளையவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கை நகரசபை அமுல் செய்தது. பெற்றோர் அல்லது பாதுகாவலர் துணை இன்றி அவர்கள் வெளியே நடமாடுவது கட்டுப்படுத்தப்பட்டது. Compiègne (Oise) என்ற மற்றொரு நகரசபைப் பிரிவிலும் இதே போன்று பதின்ம வயதினருக்கான ஊரடங்கு திங்கள் வரை அமுலில் உள்ளது.
இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட நொந்தேர் நகர்ப்பகுதியில் மூன்றாவது நாளாக நேற்றிரவு மூண்ட வன்செயல்களின் போது வங்கிக் கட்டடம் ஒன்றுக்குத் தீ மூட்டப்பட்டது.
அதனோடு இணைந்த மாடிக் குடியிருப்புகளுக்கும் தீ பரவியது. தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இரவிரவாக வீதிகளில் கூடுகின்ற இளைஞர்கள், வாண வெடிகளை ஏவுவதற்குப் பயன்படுத்துகின்ற சிறிய மோட்டார்கள் மூலம் பொலீஸாரை நோக்கி வெடிகளை ஏவித் தாக்குகிவருகின்றனர்.
பொலீஸாருக்கு எதிரான வன்முறைகளில் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்ற இந்த வாண வெடிகளைப் பல நகர சபைகள் தடைசெய்துள்ளன.
இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற கலவரங்களின் போது சுமார் 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட பொலீஸார் மற்றும் கலகம் அடக்கும் படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த வார இறுதி நாட்களில் வன்செயல்கள் மேலும் தீவிரமடையலாம் என்று ரகசிய சேவைகள் எச்சரிக்கை செய்துள்ளன.