பொதுஜன பெரமுனவை புலம்பெயர்ந்த சில தமிழ் அமைப்புகள் அரசியலில் இருந்து வெளியேற்ற முயற்சி: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்த சில சிவில் சமூகக் குழுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசியலில் இருந்து அகற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, அதில் இருந்து பிரிந்த பிரிவு, முன்னிலை சோசலிஸ்ட் கட்சி மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்த சில சிவில் சமூகக் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்களை அரசாங்கம் பட்டியலில் இருந்து நீக்கியதோடு இந்த குற்றச்சாட்டு ஒத்துப்போனது.

அரசாங்கத்தின் பிரதம கொறடாவானநாடாளுமன்ற உறுப்பினர் ரணதுங்க, தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படுவதாக கூறினார். அடுத்த தேசிய மட்டத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சித்தாந்தத்தை தோற்கடிக்க சதிகாரர்கள் விரும்புவதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை அடுத்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தின் விளைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை அமைச்சர் ரணதுங்க ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், தமது கட்சி நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், கட்சிக்கு கிடைத்த 2020 நாடாளுமன்ற ஆணையை எவராலும் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.