ஒரே நாடு ஒரே சட்டம் தலைவர் ஞானசார தேரரை ஓரங்கட்டும் அரசாங்கம்.
ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தற்போது முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில், சர்வகட்சி அரசாங்கத்தில் இணையவிருக்கும் பல தரப்பினரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குறித்த செயலணி உள்ளிட்ட அவரால் முன்னெடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளுக்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி நாட்டில் ஒவ்வொரு இனத்திற்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது என்பதனால் குறித்த செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை சிங்கள பௌத்த பெரும்பான்மைக் கருத்தியலின் காரணமாக ஆங்கிலேய சட்டம், ரோமன் டச்சு சட்டம், தேசவழமை சட்டம், முஸ்லிம் சட்டம், கண்டிய சட்டம் என்ற முக்கிய ஐந்து சட்ட முறைகளை நீக்குவது ஏற்புடையதல்ல என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்குதல், கைது நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.