ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியில் துயருறும் குழந்தைகள்!
ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள குழந்தைகள் பசி, இடப்பெயர்வு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற மிகப்பெரிய அளவிலான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்நெருக்கடிக் காரணமாக, ஐந்து வயதிற்குட்பட்ட 70 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு அவசர ஊட்டச்சத்து உதவி தேவைப்படுகிறது என்றும், 19 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் ஆபத்தில் உள்ளனர் என்றும், மேலும் கவலை தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கான யுனிசெஃப் மாநில இயக்குனர் முகமது ஃபால், கிழக்கு ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துவரும் நெருக்கடி குழந்தைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இங்குள்ள மக்கள் உயிர்வாழ்வதற்கான தீவிர நடவடிக்கைகளை நாட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், இலட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் முகமது ஃபால்.
இந்த நெருக்கடி, குழந்தைப் பருவத்திற்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் உணவு, இல்லம், பாதுகாப்பான தண்ணீர் மற்றும் பள்ளிக்குச் செல்வது போன்ற அடிப்படை உரிமைகளை இழக்கச் செய்துள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் முகமது ஃபால்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாகவே உள்ளது என்றும், இதைக் காட்டிலும், தீவிர வானிலை, பாதுகாப்பின்மை, பற்றாக்குறை போன்றவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்றும், விவரித்துள்ள முகமது ஃபால் அவர்கள், பாலின அடிப்படையிலான வன்முறையானது, பாலியல் சுரண்டல் மற்றும் முறைகேடுகள் ஆகியவற்றின் ஆபத்தை அதிகரிக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.