மட்டக்களப்பில் வீடுகளை உடைத்து கொள்ளை: 14 வயது சிறுவனுடன் 2 பேர் கைது.
மட்டக்களப்பில் வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் பொருட்களை வாங்கிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, பனிச்சையடி பகுதியில் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 4 வீடுகளில் கூரைகள் , யன்னல்கள் , கதவுகளை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல்கள் வீடுகளில் இருந்த 4 மடிக்கணணிகள் , பெறுமதியான கையடக்க தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் , மின் சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தனர். தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இ அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 25 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் சிலவற்றை அவர்களிடம் இருந்து மீட்டதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்கிய தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர், பழைய இரும்புகளை சேகரித்து விற்பவர் ,நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் கைதான நால்வரையும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்தார்.