பாரிஸ் நகரில் பலத்த காவலுடன் உலகப்போர் நிறைவு நாள் நிகழ்வு.
Kumarathasan Karthigesu
சாம்ஸ் எலிஸேயில் அணி திரளத் தடை!
பாரிஸ் நகரில் சாம்ஸ் எலிஸே(Champs-Élysées) பகுதியில் ஆண்டு தோறும் வழமையாக நடைபெற்றுவருகின்ற அஞ்சலி நிகழ்வில் அதிபர் மக்ரோன் கலந்து கொண்டார். முதலில் அவர் ஜெனரல் து ஹோலின்(General de Gaulle) சிலைக்கு முன்பாக மலரஞ்சலி செலுத்திய பின்னர் வெற்றி வளைவுப் (Arc de Triomphe) பகுதியில் போர் வீரர் நினைவாக ஒளிரும் “அணையா விளக்கு” முன்பாகவும் மலர் வளையம் வைத்து மௌன வணக்கம் செலுத்தினார். அங்கு இடம்பெற்ற படை வீரர்கள் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
மக்ரோன் பங்குபற்றுகின்ற இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ஓய்வூதியச் சட்ட எதிர்ப்பாளர்கள் பெரும் எடுப்பில் ஒன்று கூடிச் சட்டி பானை ஒலி எழுப்பித் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் சாம்ஸ் எலிஸே(Champs-Élysées) பகுதியில் மக்களின் எல்லா விதமான அணி திரள்வுகளையும் தடை செய்திருந்தது. சாம்ஸ் எலிஸேயில் சந்திக்கின்ற ஒரு டசினுக்கு மேற்பட்ட தெருக்கள் அனைத்தையும் பொலீஸார் மூடி முடக்கியிருந்தனர். அதனால் பார்வையாளர்கள் எவரும் இன்றியே நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதிபர் மக்ரோன் பாரிஸில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து இரண்டாவது பெரிய நகரான லியோனுக்குப் பயணமானார்.
அங்கு ஜேர்மனியப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மடிந்த வீரர்கள் (la Résistance) அடைக்கப்பட்ட மோலுச் சிறைச் சாலை (prison de Montluc) நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அங்கு நினைவுரையாற்றினார்.
நாசிக்களை எதிர்த்த பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கத்தின் பிரபல தலைவர்களில் ஒருவராகிய ஜோன் முலானின் (Jean Moulin) நினைவிடம் அருகே மக்ரோன் கலந்து கொண்ட வைபவங்களைக் குழப்பும் விதமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அங்கு பொலீஸ் காவல் தீவிரமாக்கப்பட்டிருந்தது. பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பால் அங்கு நடத்தப்படவிருந்த அணி திரள்வு ஒன்றுக்கு லியோன் நகரப் பொலீஸ் தலைமையகம் அனுமதி மறுத்திருந்தது. அத் தடையை அங்குள்ள நிர்வாக நீதிமன்றம் ஒன்றும் உறுதிசெய்திருந்தது.
ஜோன் முலான் நாசிப் பொலீஸ் படையால் கைது செய்யப்பட்டு ஜேர்மனிக்குக் கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பாகத் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்யப்பட்ட சிறைக் கூடத்தையும் மக்ரோன் நேரில் பார்வையிட்டார்.