ஜேர்மனியின் ஆகாயப் பரப்பில் 220 விமானங்கள் பங்கேற்கும் பெரும் போர் ஒத்திகை!
Kumarathasan Karthigesu
சிவில் விமான சேவைகள் ஜூனில் குழப்பமடையுமா?
நேட்டோ நாடுகளது விமானப் படைகள் பங்குபற்றவுள்ள பெருமெடுப்பிலான ஆகாயப் போர்ப் பயிற்சி அடுத்த மாதம் (ஜூன்) 12 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.
பல்வேறு விதமான சுமார் 220 போர் விமானங்களும் பத்தாயிரம் படை வீரர்களும் பங்கேற்கின்ற இந்தப் பயிற்சிக்காக ஜேர்மனியின் வான் பரப்பில் அரைவாசி மூடப்படவுள்ளது.
இதனால் அந்த நாட்களில் பயணிகள் விமான சேவைகளில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜேர்மனியின் வான் பரப்பு ஏற்கனவே சிவில் விமானப் போக்குவரத்துக்கு மிக நெருக்கடியான பகுதி ஆகும். அங்கு நடைபெறவிருக்கின்ற பிரமாண்டமான போர்ப் பயிற்சி ஐரோப்பிய வான் போக்குவரத்துகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும் என்று ஜேர்மனியின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
விமான சேவைகளில் தடைகள் ஏற்படுமா? விமான நிலையங்கள் மூடப்படுமா? இக்காலப் பகுதியில் பயணிகள் தங்கள் விடுமுறைப் பயணங்களை ஒத்திப்போட வேண்டுமா என்பன போன்ற கேள்விகள் விமான சேவை நிறுவன வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றன.
25 நேட்டோ நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்கின்ற இந்தப் போர் ஒத்திகைக்கு”எயார் டிபென்டர் – 23″(Air Defender 23) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், ஜேர்மனி, எஸ்தொனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, இத்தாலி, ஜப்பான், லத்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், நோர்வே, போலந்து, ருமேனியா, சுவீடன், ஸ்லோவேனியா, ஸ்பெயின், துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, கிறீஸ் ஆகிய நாடுகளின் யுத்த விமானங்களுடன் வீரர்களும் இந்தப் போர்ப் பயிற்சியில் இணைகின்றனர். சுமார் நூறு விமானங்கள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு வரவிருக்கின்றன.
நேட்டோ வான் படைகள் அதன் வரலாற்றில் நடத்துகின்ற மிகப் பிரமாண்டமான – விசாலமான – நிதிச் செலவிலான – போர்ப் பயிற்சி இது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரஷ்யா – உக்ரைன் மோதல் உலக அளவில் பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியிருக்கின்ற பின்னணியில் நேட்டோ நாடுகள் அவற்றின் ஒன்றுபட்ட வான் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் இந்தப் படை ஒத்திகையை ஒன்று திரண்டு நடத்துகின்றன.