கிரெம்ளின் மீது ட்ரோன்கள் வெடிக்கும் வீடியோ வெளியீடு!
Kumarathasan Karthigesu
புடினைக் கொல்லச் சதி மொஸ்கோ குற்றச்சாட்டு, உக்ரைன் மறுக்கின்றது
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வாசஸ்தலமாகிய கிரெம்ளின் மாளிகை மீது ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களை வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் முறியடித்து விட்டதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. அதிபர் புடினைக் கொல்வதற்காக உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி அது என்று கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் முயற்சி நடந்த சமயம் அதிபர் புடின் மாளிகையில் தங்கியிருக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதன் – வியாழன் இரவு நேரத்தில் கிரெம்ளின் மீது தாக்குதல் நடத்த வந்த இரண்டு ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மொஸ்கோ வானில் இரண்டு பறக்கும் பொருள்கள் வெடித்துச் சிதறுகின்ற காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அவற்றின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
மொஸ்கோவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள உக்ரைன், ட்ரோன் தாக்குதல்களில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் உக்ரைன் மீது ஒரு பெரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்குக் காரணம் தேடும் நோக்கத்தில் மொஸ்கோ தானாகவே இப்படி ஒரு பொய்யான தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளது – என்று உக்ரைன் அரச அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள தனது பிரதேசங்களை விடுவிப்பதற்காக உக்ரைன் பெருமெடுப்பிலான புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகி வருகின்றது. அடுத்த சில தினங்களில் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேசமயம் ரஷ்யாவின் எல்லைப் பகுதிக்குள் ட்ரோன் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன.
ஊடுருவும் அணிகள் மூலம் உக்ரைன் ரஷ்யாவின் எல்லைக் கிராமங்களில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் எல்லையைக் கொண்ட ரஷ்ய நகரம் ஒன்றில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சரக்கு ரயில்கள் மர்மமான வெடிப்புகளை அடுத்துத் தடம்புரண்டுள்ளன.
இவ்வாறான பெரும் போர் முஸ்தீபுகளுக்கு மத்தியிலேயே கிரெம்ளின் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்திருப்பது பற்றிய செய்திகள் வந்துள்ளன.
இந்தத் தாக்குதல் முயற்சியை அடுத்து பழிவாங்கும் நோக்கில் உக்ரைன் அரசுத் தலைமையை இலக்கு வைக்கப்போவதாக மொஸ்கோவில் ரஷ்ய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி கடந்த வெள்ளியன்று வழங்கியிருந்த ஒரு செவ்வியில், தானும் தனது குடும்பமுமே ரஷ்யாவின் முதலாவது தாக்குதல் இலக்குகள் என்று தெரிவித்திருந்தார். உக்ரைனை அரசியல் ரீதியாக அழித்தொழிப்பதற்காக அதன் தலைமையை அழிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.