காப்புறுதி பணம் பெறுவதற்கு மனைவியை கொன்ற கணவன்!
ஆயுள் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பிடிகல காவல்துறையினர் நேற்று (3) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இளைஞர், தனது நண்பருக்கு 20 இலட்சம் ரூபாவையும், வாடகை வாகனம் ஒன்றையும் கொடுத்து, விபத்தை ஏற்படுத்தி தனது மனைவியை கொலை செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பிடிகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி எல்பிட்டிய, பிடிகல – மாபலகம பிரதேசத்தில் 40 வயதுடைய பெண் ஒருவர் விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
அவரை விபத்துக்குள்ளாக்கிய ஜீப் ரக வாகனம் சம்பவம் இடத்திலிருந்து தப்பிச்சென்றிருந்தது.
இது குறித்து எல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர் என்றும் அவர் 4 நிறுவனங்களிடம் 50 இலட்சம் ரூபாவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மனைவியை கொலை செய்து, அதனை விபத்து என காப்புறுதி நிறுவனங்களிடம் நிரூபித்து ஆயுள் காப்பீட்டுகளை பெறுவதற்கு சந்தேகநபர் திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் வேலையற்ற இளைஞரொருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.