கோடை விடுமுறைக்கு பின், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போது, வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவி பறிப்பால் தொகுதிக்கான பிரதிநிதிகளின் குரல் மறுக்கப்படுகிறது. மக்களவை தொகுதி பிரதிநிதியின் குரல் மறுக்கப்படுவது ஈடுசெய்ய முடியாத இழப்பு. 3 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கலாம். இதனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தியின் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு பின், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.