மே தினத்தில்  கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்.

சர்வதேசமெங்கும் தொழிலாளர் தினம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகையில் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக கண்டிவீதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மே தினத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக 2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரியே இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தொழிலாளர் தினங்கள் கிளிநொச்சி மற்றும் மல்லாவியில் இடம்பெற்றிருந்தது.   மே தின ஊர்தி பவனியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்பவற்றுக்கெதிரான அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஊர்தியுடன்  பயணித்தோர். வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தமிழர் கடல், நில வளங்களை சுரண்டாதே, இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.