சுதந்திரகட்சி வேறு எந்த கட்சியுடனும் கூட்டணியமைக்கவில்லை : மைத்திரிபால சிறிசேன
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுக் கூட்டணியை அமைப்பதற்கு சகலரும் இணக்கம் தெரிவித்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இன்று கொழும்பிலுள்ள சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்துள்ளார். சுதந்திர கட்சி வேறு எந்த கட்சியுடனும் கூட்டணியமைக்கவில்லை. இனிவரும் காலங்களிலேயே தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.தற்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே நாம் கட்சியின் தனித்துவத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலேயே தீர்மானங்களை எடுப்போம்.சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மீதான விவாதத்தின் போது எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்கள் இ ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிவிப்போம். ஊழல் , மோசடி சட்ட மூலம் உள்ளிட்ட ஏற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கிய தீர்மானங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றுக்கு வாக்களிக்க முடியும். எனினும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் தொடர்பில் திருத்தங்களை முன்வைப்போம். இதே போன்று புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் எமது நிலைப்பாடு மற்றும் திருத்தங்களையும் முன்வைப்போம் என்றார்.