கலாஷேத்ரா விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தவேண்டும்: கி.வீரமணி அறிக்கை.
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன், மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.இந்த பாலியல் குற்றசாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் தமிழக டிஜிபி லத்திகா சரண் தலைமை தாங்கவுள்ளார்.தற்போது, இந்த விவகாரம் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கலாஷேத்ரா மாணவிகள் மீது பாலியல் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா? மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா? குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா? ஒன்றிய அரசின் ஆளுமையின்கீழ் கலாஷேத்ரா நிறுவனம் நடைபெற்று வருகிறது.
எந்த நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டோ அந்த நிர்வாகமே தனக்குத்தானே விசாரணை கமிட்டி அமைத்துக் கொள்வது எதற்காக? மாணவிகள் அச்சமின்றிக் கல்விக் கூடங்களுக்கு வரும் நிலை உறுதி செய்யப்படவேண்டும். இதில் தாமதத்திற்கு இடமின்றி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும், இதனால் தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று கி.வீரமணி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.