மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்துகிறது :தொல்பொருள் திணைக்களம்: இரா.சாணக்கியன் ஆவேசம்.
தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தினதும் அரசினதும் இனவாதச் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தால் தெற்கு இனவாதிகள் நுழைய முடியாதவாறு வடக்கு, கிழக்கை முடக்கியே தீருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை இனவாதி என ஆரம்பித்த அவர் கடந்த காலத்திலே மட்டக்களப்புக்கு வந்த போது குசலான மலையில் வைத்து தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளைச் செய்ய முடிகின்றது என அமைச்சரக்கு சுட்டிக்காட்டினார்.
இந்தத் தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு இந்த நாட்டுக்குள்ளே மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றீர்கள் எனவும், வெடுக்குநாரி மலையிலே ஒரு குழப்பம், குருந்தூர் மலையிலே ஒரு குழப்பம், குசலான மலையிலே ஒரு குழப்பம், அரிசி மலையிலே ஒரு குழப்பம், தற்போது திருகோணமலை – புல்மோட்டையிலே ஒரு குழப்பம் ஏற்படடுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நாட்டினுல் ஐ.எம்.எப். ஒப்பந்தம் வந்தாலும் சரி உங்களைப் போன்ற இனவாதிகள், உங்களைப் போன்ற இனவாத அமைச்சர்கள், இந்தத் தொல்பொருள் திணைக்களத்தை வைத்துக்கொண்டு, வடக்கு – கிழக்கில் தமிழர்களடைய காணிகளை சுவீகரிக்கின்றீர்கள் என தெரிவித்தார்.
தொல்பொருள் செயலணி என்பது தொல்பொருளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம்.ஆனால், தொல்பொருள் என்ற போர்வையில் ஏன் பௌத்த பிக்குகள் வர வேண்டும்? ஏன் அதிகாரிகள் இல்லையா?சோற்றுக்கும் தண்ணீருக்கும் வழியில்லாமல் இருக்கும் போதும் கூட தொல்பொருள் திணைக்களத்துக்குப் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.இவ்வாறான இனவாதச் செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், ஐ.எம்.எப். மட்டும் இல்லை எவராலும் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது என எச்சரித்தார்.
இந்தத் தொல்பொருள் செயலணியும், தொல்பொருள் திணைக்களமும், நீங்களும், இந்த அரசும் இனவாதத்துக்காகவே இதனைப் பயன்படுத்துகின்றீர்கள். இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு, கிழக்கை நாங்கள் முடக்குவோம். உங்களைப் போன்ற தெற்கு இனவாதிகள் வடக்கு, கிழக்குக்கு வர முடியாதவாறு முடக்குவோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.