கிளிநொச்சி பாடசாலை விளையாட்டுப் போட்டி தாக்குதல் :குண்டர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறுபொலிஸ் மா அதிபருக்கு ஆளுநர் பணிப்புரை.
கிளிநொச்சி பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நுழைந்து தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.
கிராம மட்ட அமைப்புக்கள், பெற்றோர் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதேவேளை கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் அடிதடியில் ஈடுபட்ட குண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றையதினம் வியாழக்கிழமை கிளிநொச்சி சாந்தபுர கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. திடீரென பாடசாலைக்குள் நுழைந்த நபர்கள் மாணவர்கள் மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு சென்ற நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குண்டர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.