குப்பை அகற்றும் தொழிலாளர்களது வேலை நிறுத்தம் தற்காலிகமாக முடிவு.
Kumarathasan Karthigesu
பாரிஸ் நகர வீதிகளில் கழிவுகள் அள்ளப்படும்.
பாரிஸ் நகரில் கடந்த பல நாட்களாகத் தடைப்பட்டிருந்த குப்பை அகற்றும் பணிகள் நாளை புதன்கிழமை முழு அளவில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸின் பிரதான தொழிலாளர் சங்கமாகிய பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) குப்பை அகற்றல் மற்றும் சுகாதார சுத்திகரிப்புத் துறைத் தொழிலாளர்களுக்கான பிரிவு (CGT de la filière déchets et assainissement) கடந்த மார்ச் 6ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தத்தைப் புதன் கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.புறநகரில் அமைந்துள்ள குப்பைக் கழிவுகளை எரிக்கின்ற (incinerators) தொழில் மையங்களை மூடி முடக்கி மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களும் இடைநிறுத்தப்படுகின்றன.
மீண்டும் தங்கள் போராட்டம் முழு வீச்சுடன் தொடங்கும் என்றும் அதுவரை பாரிஸ் நகர நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி ஊழியர்கள் வழமைபோன்று குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தொழிற் சங்கம் அறிவித்திருக்கிறது.
பணி நிறுத்தம் காரணமாகப் பாரிஸ் நகரில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொன் எடையுள்ள குப்பைக் கழிவுகள் வீதியோரங்களில் மலை போன்று குவிந்து கிடக்கின்றன. ஆரம்பத்தில் பணிப் புறக்கணிப்பில் முழு அளவில் பங்கேற்ற தொழிலாளர்கள் பின்னர் படிப்படியாகப் பணிக்குத் திரும்பத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு எவருமே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டதை அடுத்தே அதனைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் சுமார் மூவாயிரம் தொன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய கழிவுகள் நாளை புதன் கிழமை தொடக்கம் அகற்றப்படும்.
குப்பைகள் அகற்றப்படாததால் வீதிகளில் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சல் காணப்பட்டது. துர்நாற்றம் வீசியது. உணவகங்கள் உட்பட வீதியோர வர்த்தக நிலையங்களுக்கும் பாதசாரிகளுக்கும் அதனால் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தன.
ஓய்வூதிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வீதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டோர் இந்தக் குப்பைக் குவியல்களுக்கும் பிளாஸ்டிக் குப்பைக் கொள்கலன்களுக்கும் தீ மூட்டிய சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.