அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம்.

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிவாரண விலையில் தேவையான அனைத்து உரங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் உரங்களின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது 50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை 10,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

மேலும், உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் அல்லது கூப்பன்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இவ் வருடம், முதல் இரண்டு பிரதான பருவங்களுக்கு மேலதிகமாக இடைப்பட்ட பருவத்தில் விவசாயிகள் பயிரிட தயாராக உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 30,000 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிட விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மூன்று பருவங்களிலும் பயிரிடுவதன் மூலம் வெற்றிகரமான விளைச்சலை அடைய முடியும்.

அத்துடன், இம்முறை நெல் கொள்வனவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், மேலதிக பண ஒதுக்கீடுகள் தேவைப்படின் பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அறுவடையில் பெறப்படும் நெல்லை அரிசியாக மாற்றி இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

நெற்செய்கைக்கு மேலதிகமாக ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கும், உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரண விலையில் உரங்களை வழங்க முடியும். இதனால் தனியாரின் வர்த்தக ஏகபோகத்தை உடைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது விவசாயத்திற்கு மேலதிகமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கால்நடை அபிவிருத்திக்கான வேலைத்திட்டமும், இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், திரவ பால் பாவனையை அடுத்த வருடம் 100 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முட்டையை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இருப்பினும், இரண்டு மூன்று மாதங்களுக்குள் உள் நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரித்து, முட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.