மன்னர் சார்ள்ஸின் பாரிஸ் விஜயம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
Kumarathasan Karthigesu
மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் பிரான்ஸில் மூன்று தினங்கள் மேற்கொள்ளவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக எலிஸே மாளிகை இன்று அறிவித்திருக்கிறது. அதேசமயம் அதிபர் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில் மன்னரது பாரிஸ் விஜயம் ஒத்திவைக்கப்படுவதாக பிரிட்டிஷ் பிரதமரது டவுணிங் வீதி அலுவலகமும் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பான நிலை உருவாகி இருப்பதை அடுத்தே பாதுகாப்புக் காரணங்களுக்காக மன்னரது வருகை ஒத்திவைக்கப் படுகிறது. மீண்டும் எப்போது மன்னர் பாரிஸ் விஜயம் செய்வார் என்பது அறிவிக்கப்படவில்லை.
அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று காலை பக்கிங்காம் அரண்மனையுடன் தொடர்பு கொண்டு மன்னர் சார்ள்ஸுடன் பேசினார் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது. அதன் பின்னரே மன்னரது விஜயம் ஒத்திவைக்கப்படுவது பற்றிய அறிவிப்பு வெளியானது. மிக விரைவில் பிறிதொரு தினத்தில் மன்னரது பயணம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் திட்டமிட்ட படி சார்ள்ஸும் ராணி கமீலாவும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் வருகைதர இருந்தனர். அவர்களைப் பிரதமர் எலிசபெத் போர்ன் ஓர்லி விமான நிலையத்தில் வரவேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாரிஸில் வெற்றி வளைவு (Arc de Triomphe) மாவீரர் நினைவிடத்தில் மன்னரும் ராணியும் அதிபர் மக்ரோனுடன் இணைந்து மலரஞ்சலி செலுத்த இருந்தனர். அதன் பின்னர் மன்னர் செனற் சபையில் உரையாற்றுவதற்கும் .அதிபர் மக்ரோன் வேர்சாய் அரண்மனையில் (Palace of Versailles) அளிக்கவுள்ள விசேட இரவு விருந்துபசாரத்தில் அரச தம்பதியர் கலந்து கொள்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
அவர்கள் பின்னர் பாரிஸில் இருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் தென் மேற்கு நகரமாகிய போர்தோவுக்குச் (Bordeaux) செல்லவிருந்தனர். அங்கு பிரபல பிரெஞ்சு வைன் தோட்டம் (organic vineyard) ஒன்றைப் பார்வையிட இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது போர்தோ நகரில் பெரும் பதற்ற நிலை உருவாக்கியிருந்தது. அங்குள்ள நகர மண்டபத்தின் வாயில் கதவு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
இளவரசர் சார்ள்ஸ் தனது தாயாரது மறைவை அடுத்து மன்னராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மேற்கொள்ளவிருந்த முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும. அவர் பாரிஸில் இருந்து பின்னர் ஜேர்மனி செல்ல இருந்தார்.