தமிழக அரசியலில் விரைவில் மாற்றத்துக்கான வாய்ப்பு –  விஜய் அரசாங்கம் மீது கடும் விமர்சனத்தை வைத்த மு.க.ஸ்டாலின்!

Meiveli Media Team


தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு விரைவில் உருவாகும் என திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் குடும்பத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், எதிர்வரும் அரசியல் சூழ்நிலைகளுக்குத் திமுக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் திருச்சி கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அதனை அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்பாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து விஜய் தலைமையிலான தமிழக அரசாங்கத்தை விமர்சித்த அவர், கடந்த ஆறு மாத கால ஆட்சி வெறும் வெளிப்புறப் பகட்டாகவே அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் விஜய், நிஜ வாழ்க்கையில் வில்லனாகச் செயற்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் சில நிர்வாகிகள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அத்துடன், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பில் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும், சட்டமன்றத் துணை சபாநாயகரிடம் மனு வழங்கச் சென்ற ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், விஜய் தலைமையிலான அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்குத் திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">