செம்மணியில் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உருவப்பொம்மை எரிப்பு – இடைக்கால அறிக்கைக்கும் தீ வைத்து மக்கள் எதிர்ப்பு!

Meiveli Media Team


யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதுடன், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பிரதிக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்றும் வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதன்போது,  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீது தமக்கு நம்பிக்கையில்லை எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், அதன் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்துடன், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உருவப்பொம்மைக்கும் தீ வைத்து தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தின் முழுமையான உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.