இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை அமைச்சர் நேரடிக் கோரிக்கை!
Meiveli Media Team

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால் இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகளும் படகுகளும் சேதப்படுத்தப்படுவதுடன், கடல் வளங்களும் அழிக்கப்படுவதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினை தொடர்பில் இந்திய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளதாகவும், உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசாங்கத்திற்கே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் நேரடியாகக் கோரிக்கை விடுத்த அமைச்சர், திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததைப் போன்று, இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், ஒருசில மீன் வியாபாரிகள் கூலிக்கு ஆட்களை அமர்த்தி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால், இரு தரப்பினருக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு என்ற பேச்சுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். இதேவேளைஇ இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படையைப் பலப்படுத்துவதுடன், இதற்கெனத் தனியான பிரிவொன்றை உருவாக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்தியப் படகுகள் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

