ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் – பௌத்த பிக்குகள் மூவர் பொலிஸாரால் கைது!

Meiveli Media Team


அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வணக்கத்திற்குரிய பாலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள், அங்கு ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமன்ன மகா நிகாயவின் ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து அண்மையில் துறவறத்திலிருந்து நீக்கப்பட்ட ராஜங்கனயே சத்தாரத்தன தலைமையிலான குழுவினருக்கும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்தக் கைது நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது. குறித்த மோதலின்போது, ராஜங்கனயே சத்தாரத்தன தடியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் அமைத்திருந்த கூடாரத்தை அகற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், இருதரப்பினருக்கும் இடையிலான பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையிலேயே வணக்கத்திற்குரிய பாலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் குறித்த பௌத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.