இலங்கை வரவு செலவுத் திட்ட உரை வரலாற்றில் இரண்டாவது நீண்ட உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரகுமார!

Meiveli Media Team

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க, சுமார் நான்கு மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் தொடர்ச்சியாக உரையாற்றி புதிய சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மூன்றாவது வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளதுடன், இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் அதிக நேரம் நிகழ்த்தப்பட்ட வரவு செலவுத் திட்ட உரைகளில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

உரையின்போது முக்கியமான முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைத்த சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்புத் தெரிவித்தனர். அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உரையை உன்னிப்பாகக் கவனித்தனர். இந்த வரவு செலவுத் திட்ட உரையைக் கேட்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். அத்துடன், பொலிஸ் மா அதிபர், முப்படைத் தளபதிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் பார்வையாளர் கலரியில் அமர்ந்து உரையைக் கேட்டனர். இந்நிலையில், பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதியின் உரை மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது. இதன் மூலம் சுமார் நான்கு மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் தொடர்ச்சியாக உரையாற்றி, இலங்கையின் வரவு செலவுத் திட்ட உரை நேர வரலாற்றில் இரண்டாவது இடத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்.

இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் அதிக நேரம் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய சாதனை முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலே வசமே உள்ளது. 1977ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த முதலாவது வரவு செலவுத் திட்ட உரை, ஐந்து மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நீடித்து இன்றுவரை முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 2016ஆம் ஆண்டு நான்கு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் உரையாற்றி இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தார். இதேவேளை, வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் பார்வையாளர் கலரிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை  வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்துஇ அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது.