மாகாண சபைத் தேர்தலுக்கு வழி திறக்குமா: அரசியல் கட்சிகளிடம் முன்மொழிவுகளைக் கோரும் அரசாங்கம்!
Meiveli Media Team

நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் முறைமையைத் தீர்மானிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
மாகாண சபைத் தேர்தலுக்கான பொருத்தமான தேர்தல் முறைமையை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரசியல் கட்சிகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுவருகிறது. அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பித்துள்ளனர். இதன்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.
இதற்கிடையில், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்கி, பழைய தேர்தல் முறைமையின் கீழ் முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் எதிர்காலத் தேர்தல்களுக்கான புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தேர்தலை வலியுறுத்தும் மக்கள் இயக்கமொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் கட்சிகள் ஆலோசித்துள்ளன.
அதேவேளை, மாகாண சபைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் மேலும் கலந்துரையாடல்களை நடத்தி, தேர்தல் முறைமை தொடர்பான இறுதிப் பரிந்துரைகளை முன்வைக்கக் குழு திட்டமிட்டுள்ளது.

