ஐரோப்பா முழுவதும் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! இத்தாலி, பிரித்தானியா, ஸ்காட்லாந்தில் மாணவர்கள் அவசர வெளியேற்றம்!

Meiveli Media Team


ஐரோப்பிய நாடுகளில் பாடசாலைகளைக் குறிவைத்து ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பாதுகாப்புப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலி முழுவதும் சுமார் 300 பாடசாலைகளுக்கு ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல பாடசாலைகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என இத்தாலியக் கல்வி அமைச்சர் கியூசெப்பே வால்டிதாரா தெரிவித்துள்ளார். மிரட்டல் மின்னஞ்சல்கள் போலியானவையாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோம் நகரக் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் பாடசாலைகளுக்கு இதேபோன்ற அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கடந்த மாதம் இடம்பெற்ற சுமார் 300 பாடசாலைகளை இலக்குவைத்த போலி மிரட்டல் சம்பவங்களுடன் தற்போதைய மிரட்டல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்காட்லாந்து காவல்துறையும் கிடைத்துள்ள அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்து, அவை போலி மிரட்டல்களா என்பதை ஆராய்ந்து வருகிறது.
ஐரோப்பாவில் அண்மைக்காலமாக முக்கியக் கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் கலப்பினப் போர் அச்சுறுத்தல்கள் குறித்த கவலை அதிகரித்துள்ள நிலையில், பாடசாலைகளைக் குறிவைத்து இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">