36 ஆண்டுகளின் மர்மம்! யாழ். தீவக மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணையில் தொடரும் இழுத்தடிப்பு!
Meiveli Media Team
யாழ்ப்பாணத் தீவகத்தில் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஐந்து இடங்கள் தொடர்பான விசாரணைகளில், பொலிஸார் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. 36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கக் கோரி, கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊர்காவற்றுறை, அராலி சந்தி, மண்கும்பான், பிள்ளையார் கோவிலடி, அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு ஆகிய ஐந்து இடங்களே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 36 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் மற்றும் அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், விசாரணை அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, வழக்கை 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், மண்டைதீவு தோட்டக் காணியிலுள்ள கிணறு ஒன்றில் சுமார் 60 மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இராணுவத்தினரால் பொறுப்பில் எடுக்கப்பட்ட 84 பேர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

