நாளை 2027 வரவு செலவுத் திட்டம்! ஜனாதிபதி அநுரவின் நிதி அறிவிப்புகளை எதிர்பார்க்கும் இலங்கை மக்கள்!

Meiveli Media Team


இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க நாளை  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்காக நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார். இதனைத் தொடர்ந்து,, நாட்டின் பொருளாதார நிலைமை, அரசாங்கத்தின் வருமானம், செலவினங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் 26 நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்படி, நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலை விவாதம், டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாடாளுமன்ற அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினத் திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் பெறுவதற்கான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. பொருளாதார மீட்சி, அரச வருமான அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கவுள்ளனர்.