கொழும்பு துறைமுக நகரில் சீனாவின் ஆளில்லா பயணிகள் விமானம் வெற்றிகரமாகப் பரீட்சார்த்தப் பறப்பு!

Meiveli Media Team


கொழும்பு துறைமுக நகரில் சீனாவினால் உருவாக்கப்பட்ட தானியங்கி பயணிகள் விமானத்தின் செயல்விளக்கப் பறப்பு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. EH216-S எனப்படும் இந்த விமானம் மின்கலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், விமானி இல்லாமல் தானியங்கி முறையில் பறக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த விமானம், ஓடுபாதை இன்றி செங்குத்தாக மேலெழும்பவும் தரையிறங்கவும் கூடியது.

சீனாவின் EHang Holdings நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை, நகரப் போக்குவரத்து மற்றும் விமான நிலையங்களுக்கான போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கொழும்பிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றுப் போக்குவரத்து வழியாக இதனைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. சுமார் 25 கிலோமீற்றர் வரையான பயணத் தூரத்தை இலக்காகக் கொண்டு இத்திட்டம் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஆரம்பகட்டப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 11ஆம் திகதி உத்தியோகபூர்வ செயல்விளக்க நிகழ்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், பயணிகளை ஏற்றிக்கொண்டு வணிக ரீதியில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் விமானப் பாதுகாப்புஇ வான்வழிக் கட்டுப்பாடு மற்றும் உரிய ஒழுங்குமுறை அனுமதிகள் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பசுமையான நவீன வான்வழிப் போக்குவரத்திற்கான புதிய வாய்ப்பாக இந்தத் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த முடியும் என சீனத் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.