மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு!

Meiveli Media Team


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் நினைவுச் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது மனைவி சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா ரவிராஜ், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்ற அவர், பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். தமிழ் மக்களின் உரிமைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களை நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்குகளிலும் துணிச்சலுடன் முன்வைத்தவர்.

தமிழ், சிங்கள மொழிகளில் சிறந்த ஆற்றல் கொண்டிருந்த அவர், தென்னிலங்கை ஊடக விவாதங்களிலும் பங்கேற்று தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி கொழும்பு நாராஹேன்பிட்டியில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் 2016ஆம் ஆண்டு ஜூரி சபை ஒருமனதாக விடுதலை செய்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவரது மனைவி சசிகலா ரவிராஜ் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், நடராஜா ரவிராஜின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து இன்றைய நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.