கிளிநொச்சியில் யுவதிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: 17 வயதுச் சிறுவன் உட்பட மூவர் கைது!

Meiveli Media Team


கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதுடைய சிறுவனும் உள்ளடங்கியுள்ளமை இச்சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 26 வயதுடைய யுவதி காயங்களுடன் சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.