அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் புதிய கல்விசார் இணைப்பை ஏற்படுத்தும் யாழ். பல்கலைக்கழகம்!

Meiveli Media Team


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் அமெரிக்காவின் தென் இலினோய் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், அறிவுப் பகிர்வு, ஆய்வுச் செயற்பாடுகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் அமெரிக்காவின் தென் இலினோய் பல்கலைக்கழகத்தின் நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கும் இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் மூலம் இரு பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுத்தல், கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளுதல், கல்விசார் பயிலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தகவல் மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தும் வகையில் இணையத்தளங்களை ஒன்றோடொன்று இணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.