இந்தியாவின் அகண்ட பாரத நகர்வு ஆபத்தானது: அடிபணிந்த தனி ஈழத்தை உருவாக்க முயற்சி – பலாங்கொட கஸ்ஸப தேரர் குற்றச்சாட்டு!
Meiveli Media Team

‘அகண்ட பாரதத்தை உருவாக்கும் நோக்கில், இந்தியாவுக்கு அடிபணிந்த தனி ஈழமொன்றை அமைப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியாவின் விருப்பத்துக்கு ஏற்ப ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செயற்பட்டாலும், அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப நாங்கள் செயற்படத் தயாரில்லை’ எனப் பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புனித பூமி விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அநுராதபுரத்தில் தர்மதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். பொலிஸார் எம்மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்தினாலும், போராட்டக் களத்திலிருந்து வெளியேறப் போவதில்லை. இந்தியாவுடனான உடன்படிக்கைகளின் ஊடாக போலியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துஇ காணிகளை விற்பனை செய்து, மக்களை வெளியேற்றி, அப்பகுதியை சர்வமத நகரமாகவும் உறங்காத நகரமாகவும் மாற்றி தொல்பொருள் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளுக்கு எதிராகவே நாம் போராடுகின்றோம் எனத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாம் புத்தபெருமானின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள். புனித பூமியைப் பாதுகாப்பதற்காகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எனவே, சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட வேண்டும். இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவின் தற்போதைய நகர்வுகள் ஆபத்தானவையாக உள்ளன. அகண்ட பாரதத்தை உருவாக்கும் நோக்கில்இ இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட தனி ஈழத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும், இதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சர்வதேச புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியுடன் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியுள்ளதாகவும்இ இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தப் பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகள் பௌத்த தர்ம நீதிமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து மகாநாயக்க தேரர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

