இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்: நடவடிக்கைகள் ஆரம்பம்

Meiveli Media Team


மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கோரப்பட்டன. மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கேட்டறிந்துள்ளது. குறித்த குழுவின் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டன. இதன்போது, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -ஈபிஆர்எல்எப் சார்பில் கே. பிரேமச்சந்திரன், ஈரோஸ் ஜனநாயக முன்னணி சார்பில் ராமசாமி ராஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி -ஈபிடிபி, சார்பில் சண்முகநாதன் சஞ்சீவன் ஆகியோர் கலந்துகொண்டு தத்தமது கட்சிகளின் நிலைப்பாடுகளையும் யோசனைகளையும் முன்வைத்தனர்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான தேர்தல் முறைமை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வட்டகல, அருண் ஹேமச்சந்திர உள்ளிட்டோருடன், விசேட குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க மற்றும் லக்ஷ்மன் நிபுணாரச்சி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்று, அதனடிப்படையில் பரிந்துரைகளை முன்வைக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.