பசில் ராஜபக்சவிற்கு சிவப்பு பிடியாணை : இலங்கைக்கு அழைத்துவர சர்வதேச நடவடிக்கை
Meiveli Media Team

இலங்கை – சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குத் திரும்ப அழைத்துவருவதற்கான சர்வதேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் இலங்கைப் பொலிஸார் சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கும் தகவல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பிடியாணையின் அடிப்படையில், அவரை இலங்கைக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்கக் குடிமகனான பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்துவருவதற்குஇ இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட நடைமுறைகள் மற்றும் ஒப்படைப்பு தொடர்பான விதிமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றங்களின் நடைமுறைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான நிதிப் பயன்பாட்டு வழக்கின் ஒரு பகுதியாக, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

